இபிஎஸ்., குறித்த ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது: பன்னீர்செல்வம்
இபிஎஸ்., குறித்த ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது: பன்னீர்செல்வம்
UPDATED : ஜன 03, 2024 04:04 PM
ADDED : ஜன 03, 2024 02:16 PM

சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., குறித்த ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரை சந்தித்த போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. அவரை சந்தித்த போது வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன். மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் டில்லிக்கு சென்று அவரை சந்திப்பேன்.
இபிஎஸ்., தொடர்பான ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது அதை வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் நிச்சயம் கிடைக்கும். இபிஎஸ் ராஜினாமா செய்யும் வரை உரிமை காக்கும் போராட்டம் தொடரும். எம்ஜிஆர் வகுத்த விதிகளை கல்நெஞ்சம் படைத்தவர்கள் ரத்து செய்தனர். சசிகலாவை தரக்குறைவாக பேசி நம்பிக்கை துரோகம் செய்தவர் இபிஎஸ்.
அதிமுகவை., மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும். அமமுக., உடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்போம். சசிகலா விரும்பினால், அவரையும் சந்திப்பேன். பா.ஜ., உடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளது. இபிஎஸ் ஆட்சியில் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ள உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
லோக்சபா தேர்தலில் பாஜ., கூட்டணி வெற்றி பெறும். மோடி, மீண்டும் 3வது முறையாக ஆட்சிக்கு வருவார். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.