கைக்கு எட்டிய பதக்கம் கழுத்துக்கு வரவில்லை; சேட்டையால் பறிபோனது தங்கம்; ஈரான் வீரர் சோகம்!
கைக்கு எட்டிய பதக்கம் கழுத்துக்கு வரவில்லை; சேட்டையால் பறிபோனது தங்கம்; ஈரான் வீரர் சோகம்!
UPDATED : செப் 08, 2024 05:31 PM
ADDED : செப் 08, 2024 01:37 PM

பாரீஸ்: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஈரான் வீரரிடம் இருந்து பதக்கத்தை திரும்பப் பெற்றதற்கான காரணம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
பதக்க மழை
பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கை காட்டிலும் இது இந்தியாவுக்கு கூடுதல் பதக்கங்களாகும்.
ஜாக்பாட்
தொடர்ந்து பதக்க வேட்டையில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்றும் பதக்கங்களை வென்று குவித்தனர். அந்த வகையில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நவ்தீப் சிங், தனது பாராலிம்பிக் வரலாற்றில் சிறந்த தூரமாக 47.32 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளி வென்றார். இது தங்கம் வென்ற ஈரான் நாட்டு வீரர் சதேக்கை விட வெறும் 0.32மீ குறைவுதான்.
தகுதிநீக்கம்
இதனிடையே, ஈரான் வீரர் சதேக் பாராலிம்பிக் கமிட்டியின் விதிகளை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக, வெள்ளி வென்ற இந்திய வீரர் நவ்தீப் சிங்கிற்கு, ஜாக்பாட்டாக, தங்கம் வழங்கப்பட்டது. இதன்மூலம், பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.
கொடி
இந்த நிலையில், ஈரான் வீரர் சதேக் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. போட்டியின் முதல் இரண்டு வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டதை கொண்டாடும் விதமாக, ரசிகர்களை பார்த்து கழுத்தில் கைவைத்து, 'சீவி விடுவேன்' என்பதைப் போல் சைகை காண்பித்தார். இதற்காக அவருக்கு முதல் முறை மஞ்சள் கார்டு காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தங்கம் வென்ற கொண்டாட்டத்தில், அவரது நாட்டு கொடிக்கு பதிலாக, கருப்பு நிறம் கொண்ட, சிவப்பு நிறத்தில் அரேபிய மொழியில் எழுதப்பட்டிருந்த கொடியை காண்பித்தார். இது அவரது நாட்டுக்கொடி அல்ல; மதம் தொடர்பான பிரார்த்தனை வாசகம் அடங்கிய பேனர். இப்படி காட்டுவது விதி மீறல் என்பதால் மீண்டும் மஞ்சள் கார்டு காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து இரண்டு முறை மஞ்சள் கார்டு பெற்ற அவர், விளையாட்டு வீரருக்கான நெறியை மீறியதாக கருதி, அவரது பதக்கம் ரத்து செய்யப்பட்டது. கைக்கு எட்டிய பதக்கம் கழுத்துக்கு வராத வருத்தத்தில் அவர் கூறுகையில், 'நான் இப்போது காட்டிய அதே கொடியை கடந்த பாரா ஒலிம்பிக் போட்டியின்போதும் காட்டினேன். அப்போது யாரும் கேட்கவில்லை. இப்போது தான் குறை சொல்கின்றனர்,' என்று வருத்தப்பட்டார்.
விவாதம்
அவரது தகுதி நீக்கத்தை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். சிலரோ இது சியா முஸ்லீம்களைச் சேர்ந்த அமைப்பின் கொடி என்றும், ஒரு சிலரோ முஸ்லீம்களின் நம்பிக்கையை பிரகடனப்படுத்துவதற்கான வலியுறுத்தல் என்றும் மாறி மாறி கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேவேளையில், பாராலிம்பிக்கில் விதிகளுக்கு உட்பட்டே வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும், அதில் இருந்த சற்று விலகினாலும் இது போன்ற விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும் என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.
முதல்முறையல்ல
இதனிடையே, 2020 டோக்கியோ பாராலிம்பிக்கிலும் இதைப் போன்றே கொடியைக் காண்பித்ததாகவும், ஆனால், அப்போது எந்த நடவடிக்கையும் தன் மீது எடுக்கவில்லை என்று ஈரான் வீரர் சதேக் விளக்கம் அளித்துள்ளார். எது எப்படியோ, போனது போனது தானே...!

