ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் திடீர் முடக்கம்: பயணியர் அவதி
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் திடீர் முடக்கம்: பயணியர் அவதி
ADDED : டிச 27, 2024 01:43 AM
சென்னை:ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், 'ஆன்லைனில்' டிக்கெட் எடுக்க முடியாமல், பயணியர் அவதிப்பட்டனர்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 85 சதவீத்துக்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் தான் முன்பதிவு செய்கின்றனர்.
மேலும், தனியார் பஸ் டிக்கெட் முன்பதிவு, உணவு டெலிவரிக்கு ஆர்டர் செய்வது, அறைகள் முன்பதிவு உட்பட பல்வேறு கூடுதல் வசதிகளுடன், இந்த இணையதளம் செயல்படுகிறது. ஆனாலும், இந்த இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால், பயணியர் அவதி தொடர் கதையாக இருக்கிறது.
இதற்கிடையே, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் நேற்று காலை, 10:15 மணி அளவில் திடீரென முடங்கியது. இது தவிர, அதன் செயலியிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். குறிப்பாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோர் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து, பயணியர் சிலர் முன்பதிவு மையங்களுக்கு சென்று, வரிசையில் காத்திருந்து, டிக்கெட் முன்பதிவு செய்தனர். நேற்று பகல் 12:20 மணிக்கு பின்னரே, டிக்கெட் முன்பதிவு முழுமையாக சீரானது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், சமீப காலமாக அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது.
குறிப்பாக, தத்கல் நேரத்தில் இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது, ஏதாவது முறைகேடு நடக்கிறதோ என்ற சந்கேத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

