ADDED : பிப் 07, 2024 12:25 AM

''புகார் குடுத்தும், ஆணையம் கண்டுக்கல பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி தலைவரா இருக்கிறவர் கலைச்செல்வன்... பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த இவர், தன் தம்பிக்கு கல் குவாரி டெண்டர் எடுக்கிறதுக்காக, போன வருஷம் அக்., 30ல, கலெக்டர் ஆபீசுக்கு போயிருந்தாரு பா...
''அவங்களை தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் தடுத்து, சரமாரியா அடிச்சு, உதைச்சு, ஜாதி பேரை சொல்லியும் திட்டினாங்க... இது சம்பந்தமா, பாதிக்கப்பட்டவங்க தரப்புல டில்லியில இருக்கிற தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்துல, டிச., 19ம் தேதி நேர்ல போயே புகார் குடுத்தாங்க...
''கிட்டத்தட்ட ரெண்டு மாசமாகியும், இதுவரைக்கும் யாரும் விசாரிக்க வரவே இல்ல பா...'' என்றார், அன்வர்பாய்.
''சென்னை, பாடியில இருக்கற ஆயிரம் வருஷம் பழமையான திருவல்லீஸ்வரர் கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் நியமித்த பிறகு நிறைய முறைகேடுகள் நடக்கறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''மூணு மாசத்துக்கு முன்னாடி, கோவில்ல 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு சேர்த்திருக்கா... இதுக்கு எந்த அறிவிப்பும், நேர்காணலும் நடத்தல ஓய்...
''தங்களுக்கு வேண்டியவாளிடம், கணிசமான தொகையை வாங்கிண்டு, வேலை போட்டு குடுத்திருக்கா... இவாளுக்கு விதிப்படி ஊதியமா, 6,000 ரூபாய் தான் தரணும் ஓய்... ஆனா, 15,000 ரூபாயை குடுக்கறா... காலப்போக்குல, அவாளை நிரந்தர பணியாளர்களா மாத்தவும் ஏற்பாடுகள் நடக்கறது ஓய்...
''இதுல, ஏற்கனவே இணை கமிஷனரால பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருத்தர், மறுபடியும் ஊழியரா சேர்க்கப்பட்டிருக்கார்... கோவில் வங்கி கணக்குல இருந்து, 2 கோடி ரூபாயை சமீபத்துல எடுத்திருக்கா ஓய்...
''மாசத்துக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல கோவிலுக்கு வருமானம் வர்ற சூழல்ல, டிபாசிட் தொகையில ஏன் கை வச்சான்னு தான் தெரியல...
''அதே மாதிரி, அறநிலையத் துறை நிதியில நடக்கற திருப்பணிக்கு, கமிட்டி எதுவும் அமைக்காம இஷ்டத்துக்கு பணிகள் நடக்கறது...
''கும்பாபிஷேக பணிகள்லயும் முறைகேடு நடக்க வாய்ப்பிருக்குன்னு முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பக்தர்கள்பக்கம், பக்கமா புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

