பொறுப்பற்ற பேச்சுகள் அரசியல் கட்சிக்கு அழகல்ல: ஐகோர்ட் கிளை
பொறுப்பற்ற பேச்சுகள் அரசியல் கட்சிக்கு அழகல்ல: ஐகோர்ட் கிளை
UPDATED : ஜூலை 09, 2025 05:16 PM
ADDED : ஜூலை 09, 2025 04:38 PM

மதுரை: கோவில் தேரோட்டத்துக்கு பாதுகாப்பு தருவதற்காக நா.த.க., ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தரவில்லை என்றும், தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்றும் கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில், ' கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், அனுமதி மறுக்கப்பட்டது,' என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது: கண்டதேவி கோவில் தேரோட்டம் நடக்கும் நாளில் அனுமதி கொடுக்க மறுத்ததற்கு தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என சொல்வது அழகல்ல. பொது வெளியில் பொறுப்பற்ற பேச்சுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம். சட்டத்தின் முன் சாதாரண குடிமகன் முதல் ஜனாதிபதி வரை சமம். மக்களுக்காக போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால், பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு நாம் தமிழர் கட்சியினர் புதிதாக மனு தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது அடுத்த 24 மணி நேரத்துக்குள் போலீசார் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.