ADDED : ஜூலை 22, 2025 05:42 AM

சென்னை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் அமைக்க, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரிய வகை பறவைகளை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் வெப்ப மண்டல பகுதிகளில், இருவாச்சி பறவைகள் அதிகம் காணப்படும். அவற்றை பாதுகாக்க, சிறப்பு மையம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் அமைய உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இருவாச்சி பறவைகள் இருக்கும் இடங்கள் குறித்த வரைபடம் தயாரித்தல், அவற்றின் வாழ்விடத்தை பாதுகாக்கும் தனியாருக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.