ADDED : ஆக 26, 2025 05:45 AM

சென்னை: தானியங்கி வானிலை மையங்களில் பதிவாகும் மழை அளவு விபரங்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வசதியை, இந்திய வானிலை துறை முடக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கட்டா, நாக்பூர், கவுஹாத்தி என ஆறு மண்டலங்களாக, இந்திய வானிலை துறை பிரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாநில அளவிலான வானிலை ஆய்வு மையங்களும் செயல்படுகின்றன.
முன்னறிவிப்பு செயற்கைக்கோள் மற்றும், 'ரேடார்' வாயிலாக பெறப்படும் தரவுகள் அடிப்படையில், இந்த மையங்கள் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருகின்றன.
ஆனால், இந்த அறிக்கைகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்த விபரங்கள், உத்தேச மதிப்பீடு அடிப்படையிலேயே கிடைக்கின்றன.
இந்நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, 'ரேடார்'கள் வாயிலாக பெறப்படும் தகவல்கள் அடிப்படையில், அடுத்த சில மணி நேரங்களில், எங்கு, எவ்வளவு மழை பெய்யும் என்ற விபரங்களை, வானிலை ஆய்வு துறை, 'நவ்காஸ்ட்' என்ற தலைப்பில் வழங்கி வருகிறது.
இந்நிலையில், மழை அளவு விபரங்களை திரட்ட, தாலுகா வாரியாக மழைமானிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் விபரங்கள், 12 மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கின்றன.
இதில், துல்லிய தன்மையை ஏற்படுத்தும் விதமாக, தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் மாவட்டத்துக்கு, 2 வீதம் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தானியங்கி வானிலை மைய விபரங்களை, பொது மக்கள், பிற துறைகள் பார்க்கும் வசதி முடக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஆர். ஹேமசந்தர் கூறியதாவது:
மழை அளவு விபரங்களை, துல்லியமாக உடனுக்குடன் அறிவதற்காக, தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த மையங்கள் உள்ள பகுதிகளில், மழை பெய்யும் போது, அது குறித்த தரவுகள், 15 அல்லது, 20 நிமிடங்களுக்கு, ஒரு முறை இணையதளத்தில் தானாக பதிவாகும்.
இத்தகவல்களை இணையதளம் வாயிலாக, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பிற அரசு துறையினர், பொதுமக்கள் அறிய வசதி இருந்தது. இந்த வசதி, இந்திய வானிலை துறை அதிகாரிகள் மட்டும் பார்க்கும் வகையில் முடக்கி வைக்கப்பட்டுஉள்ளது.
பாதிப்பை தடுக்கலாம் மேக வெடிப்பு மற்றும் திடீரென சில பகுதிகளில் அதீத மழை கொட்டுவது குறித்து, உடனுக்குடன் பல்வேறு தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த அடிப்படையில், தானியங்கி வானிலை மைய தரவுகளை, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் வெளிப்படையாக்க வேண்டும். இதனால், மழை காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை தடுக்க வழி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.