தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா: விஜய் கேள்வி
தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா: விஜய் கேள்வி
ADDED : டிச 03, 2024 07:15 PM

சென்னை: ''ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா,'' என த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர்.
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?
ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா?
அந்த நேரத்துக்கான தீர்வைத் தந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்?
மழை வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகமான தலையாய கடமை, முதலில் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதை முழுவதுமாகவே மறந்துவிடுகின்றனர்.
மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர்.
இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது. எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும், எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும், மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு.
எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க்கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர்.
இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.