‛டாஸ்மாக்' வழக்கு: எங்களை அவமதித்து விட்டீர்கள்; தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம்
‛டாஸ்மாக்' வழக்கு: எங்களை அவமதித்து விட்டீர்கள்; தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம்
UPDATED : ஏப் 10, 2025 06:38 AM
ADDED : ஏப் 08, 2025 01:03 PM

சென்னை: 'டாஸ்மாக்' தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்த முறையான தகவல் எதையும் தமிழக அரசு அளிக்காமல், தங்களை அவமதித்து விட்டதாக, நேற்று (ஏப்ரல் 08) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 09) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடையாததால், விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 'மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனை சட்ட விரோதமானது' என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை விதிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விலகியது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையில் இருந்து விலகியது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை, வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், 'இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' என, கோரப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: உங்கள் சம்மதத்துடன் வழக்கின் இறுதி விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வழக்கு பட்டியலிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக, நீங்கள் ஏன் எங்களிடம் தெரியப்படுத்தவில்லை? அதுகுறித்து தெரியப்படுத்தி இருந்தால், வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க மாட்டோம். காலையில் வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய போது கூட, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த விபரத்தை தெரியப்படுத்தவில்லை. பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மனு தாக்கல்
இந்த வழக்குக்காக, பல மணி நேரத்தை செலவிடுகிறோம். இதன் வாயிலாக, நீங்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளீர்கள். குறைந்தபட்சம் நீதிமன்றத்துக்காவது நேர்மையாக இருக்க வேண்டும்.
இந்த மனு, பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப் பாற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்டதா? இவ்வழக்கில், இறுதி வாதத்திற்கு நீங்கள் தான் உறுதி அளித்தீர்கள்; அதை மதித்திருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மாநில அரசின் உரிமைக்காகவே மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதற்கு தங்களுக்கு உரிமை உள்ளதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், 'உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால், பிற்பகலில் வாதங்களை முன்வைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். அதன்படி, பிற்பகலில் வழக்கின் இறுதி விசாரணை துவங்கியது.
டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் என்.ரமேஷ், தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
ஒத்திவைப்பு
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 09) விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பு தனது வாதங்களை முன்வைத்தது. பின்னர், அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடையாததால், விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.