உண்மை அறியாமல் உளறுவதா? கவர்னர் மீது அமைச்சர் பாய்ச்சல்
உண்மை அறியாமல் உளறுவதா? கவர்னர் மீது அமைச்சர் பாய்ச்சல்
ADDED : டிச 09, 2024 04:22 AM
சென்னை : 'தலித் மக்களுக்கு எதிராக, கவர்னர் ரவி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்' என, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் அம்பேத்கரின், 69வது நினைவு தின விழா நடைபெற்றது. விழாவில் பேசிய கவர்னர் ரவி, 'தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள், கடந்த மூன்றாண்டுகளில், 40 சதவீதம் அதிகரித்துள்ளன' என்றார்.
அவரது பேச்சு ஆதாரமற்றது எனக்கூறி, அமைச்சர் மதிவேந்தன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள், கல்வி, தொழில், பொருளாதார நிலைகளில் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலே சாட்சி.
தி.மு.க., ஆட்சியில், அம்பேக்தர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 1,303 தொழில் முனைவோருக்கு, 159 கோடி ரூபாய் மானியம்; தொழில் முனைவு திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில், 52,255 பயனாளிகளுக்கு 409.68 கோடி ரூபாய் மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
சமத்துவ மயானங்களை கொண்டுள்ள, 199 கிராமங்களுக்கு, 30 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சட்டம் படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, தொழிற்பயிற்சி மேற்கொள்ள, 774 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் என, பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தி.மு.க., ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள், அரசின் சமூக, பொருளாதார வளர்ச்சி திட்டங்களால் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
மேலும், ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. உண்மை அறியாமல் உளறுபவர்களை மக்கள் புறந்தள்ளுவர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.