எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவது தான் பணியா? சந்தேகப்படுகிறார் அன்புமணி
எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவது தான் பணியா? சந்தேகப்படுகிறார் அன்புமணி
ADDED : நவ 12, 2024 02:26 PM

சென்னை: 'ஆளுங்கட்சியினரை காப்பதும், எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும் தான் பணியா? போலீசார் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், சென்னை மாநகர போலீசாரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழக போலீசார் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனம் தான் சான்று.
அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை போலீசார் கடுமையாகத் தாக்கியதுடன், சிறுமியின் தாய் நடத்தை மீதே சந்தேகம் தெரிவித்ததுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியை கசிய விட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்தியிருப்பதை ஏற்றுகொள்ள முடியாது. தமிழக போலீசாரின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில், அதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம் போலீசாரின் தவறுகளுக்கு துணை போகிறது என்று தான் பொருளாகும்.
தமிழக போலீசாரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலையளிக்கிறது. போலீசார் எந்த அளவுக்கு ஆளும்கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது; எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்கு பழிவாங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். தமிழக காவல்துறைக்கு என சில சிறப்புகளும், பெருமைகளும் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். போலீசார் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.