முரசொலி பட்டா இடத்தில் தான் உள்ளதா?: ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
முரசொலி பட்டா இடத்தில் தான் உள்ளதா?: ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஜன 03, 2024 05:55 PM
ADDED : ஜன 03, 2024 05:39 PM

சென்னை: முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் தான் உள்ளது என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று(ஜன.,03) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, '' பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது '' என முரசொலி அறிக்கட்டளை தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் தான் உள்ளது என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.