ரிஷிவந்தியத்தில் பிரேமலதா? தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்
ரிஷிவந்தியத்தில் பிரேமலதா? தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்
UPDATED : பிப் 20, 2026 10:05 PM
ADDED : பிப் 20, 2026 05:58 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, 'வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன்' என அறிவித்துள்ளார். ஏற்கனவே, கணவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடக்கூடும் என தகவல் பரவி இருக்கிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில், அத்தொகுதியில் தி.மு.க., போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தம் கார்த்திகேயன். கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., செயலராகவும் இருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன்.
பிரேமலதா போட்டியிட விரும்பினால், ரிஷிவந்தியத்தில் தன்னால் மீண்டும் போட்டியிட முடியாது என்பதால், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்ததை விரும்பாததோடு, கடும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களும், கட்சியின் நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே தொகுதிக்கென பல்வேறு திட்டங்களை தீட்டி, அதை செயல்படுத்துவிம்விதமாக நிறைய பணத்தை செலவு செய்திருப்பதால், இதை எப்படி சமாளிப்பது என, கட்சியினருடன் ஆலோசனையில் இறங்கி உள்ளார்.
இது குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த இரு தேர்தல்களாக, ரிஷிவந்தியத்தில் தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது. தற்போதும், தொகுதி தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது இந்நிலையில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடக்கூடும் என்பதால், தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-

