பிரதமரின் கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமீறலா?: கலெக்டர் விளக்கம்
பிரதமரின் கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமீறலா?: கலெக்டர் விளக்கம்
ADDED : மே 30, 2024 12:05 PM

கன்னியாகுமரி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த குமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர், 'பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல' எனக் கூறினார்.
பிரதமர் மோடி இன்று (மே 30) மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் பாறையில் தியானத்தை துவங்குகிறார். ஜூன் 1ல் அங்கிருந்து கிளம்புகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. அதில், 'பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்வது தேர்தல் விதிமீறல். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தியானத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது' எனக்கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை மற்றும் விவேகானந்தர் பாறையில் தியானம் போன்ற நிகழ்வுகள் தேர்தல் விதிமீறலா என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனுமதி கோரப்படவில்லை,'' என விளக்கமளித்தார்.