போதைப் பொருள் விற்பவர்களுக்கு சிறைச்சாலை புகலிடமா?: கேட்கிறார் இ.பி.எஸ்.,
போதைப் பொருள் விற்பவர்களுக்கு சிறைச்சாலை புகலிடமா?: கேட்கிறார் இ.பி.எஸ்.,
ADDED : ஜூலை 03, 2024 01:25 PM

சென்னை: போதைப் பொருள் விற்பவர்களை திருத்தும் சிறைச்சாலை தற்போது பாதுகாப்பு இடமாக மாறிவிட்டதா? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து, அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை புதிய பரிமாணம் பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்.
போதைப் பொருள் விற்பவர்களை திருத்தும் சிறைச்சாலை தற்போது பாதுகாப்பு இடமாக மாறிவிட்டதா?. போதைப்பொருட்கள் கடத்தலுக்கு துறைமுகங்கள், கொரியர் சர்வீஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்த கடத்தல் பெரும் புள்ளிகள், தற்போது உச்சகட்டமாக சிறைச்சாலையையே போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக பயன்படுத்தி உள்ளது சமூக பொறுப்புள்ள எவராலும் ஏற்க முடியாது.
உளவுத்துறை, மதுவிலக்கு பிரிவுகள் சிறைத்துறையுடன் இணைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிறைகள் போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறிவிட்டது. மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.