சுயசான்று அனுமதி கட்டடங்களில் விதிமீறலா? நடவடிக்கையில் இறங்கும் உள்ளாட்சிகள்
சுயசான்று அனுமதி கட்டடங்களில் விதிமீறலா? நடவடிக்கையில் இறங்கும் உள்ளாட்சிகள்
ADDED : மே 30, 2025 02:52 AM

சென்னை: சுயசான்று முறையில் ஒப்புதல் பெற்றவர்கள், விதிகளுக்கு மாறாக கட்டடம் கட்டுவதை கண்டுபிடித்து, அனுமதியை ரத்து செய்யும் பணிகளை, உள்ளாட்சி அமைப்புகள் முடுக்கி விட்டுள்ளன.
தமிழகத்தில் 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி வரை வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் பணிகள் எளிமையாகி உள்ளன. இவற்றில், வரைபடம் மற்றும் குறிப்பிட்ட சில ஆவணங்களை, 'ஆன்லைன்' முறையில் தாக்கல் செய்தால் போதும்.
ஒப்புதல்
அவற்றில் கட்டணங்களை செலுத்திய சில நிமிடங்களில், கட்டுமான அனுமதிக்கான கடிதம் ஆன்லைன் முறையில் வந்து விடும். கடந்த 2024 ஜூலையில் இத்திட்டம் துவங்கப்பட்டது. இதன் வாயிலாக தற்போது வரை, 75,000க்கும் மேற்பட்டோர் எளிதாக ஒப்புதல் பெற்றுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தலையீடு இன்றி, பொது மக்கள் எளிதாக ஒப்புதல் பெற, இத்திட்டம் பேருதவியாக அமைந்துள்ளது. இவ்வாறு அனுமதி பெறும் நபர்கள், அதை சரியாக பயன்படுத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்யும் பொறுப்பு உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுயசான்று முறையில் கட்டட அனுமதி பெற்ற திட்டங்கள் குறித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நிலம் தொடர்பாக பிரச்னை இருப்பின், 10 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
கட்டுமான பணியில் விதிமீறல்கள் இருந்தால், திட்ட அனுமதியை ரத்து செய்ய, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுஉள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுயசான்று முறையில் கட்டட அனுமதி பெற்றவர்கள், கூடுதல் தளங்கள் கட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவது, திடீர் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு, சுயசான்று அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சந்தேகம்
தமிழகம் முழுதும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அதிகாரிகள், இது போன்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சராசரியாக மாவட்டத்துக்கு, 10 கட்டடங்கள் வீதம் விதிமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சுயசான்று அனுமதி பெறுவோர், விதிகளுக்கு உட்பட்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகரமைப்பு வல்லுநர்கள் கூறியதாவது:
சுயசான்று முறையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீடு இன்றி, மக்கள் இதில் கட்டட அனுமதி பெற முடிகிறது.
இதனால், சுயசான்று முறையில் ஒப்புதல் பெற்றவர்களிடம், வசூல் வேட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்ற கட்டடங்களை ஆய்வு செய்து, வேண்டுமென்றே விதிமீறல் இருப்பதாக கூறி, அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
இவ்வாறு அனுமதி பெறுவோர், விதிகளுக்கு உட்பட்டு சரியாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.