தமிழகம் போதை பொருள் கடத்தல் மையமா? பிரதமர் குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., பதில்
தமிழகம் போதை பொருள் கடத்தல் மையமா? பிரதமர் குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., பதில்
UPDATED : மார் 08, 2024 11:07 AM
ADDED : மார் 08, 2024 05:41 AM

சென்னை : ''போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது,'' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கூறினார்.
தமிழகத்தில், போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செய்ய, பள்ளி, கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைத்து, போதைக்கு எதிரான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்குழுக்களுக்கு, சென்னை வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் துவக்கினார். போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு 'சிடி' மற்றும் காமிக் புத்தகங்களை வெளியிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி: தமிழகம் வழியாக இலங்கைக்கு, 90 சவீதம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் நடப்பது தெரிய வந்துள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு, என்.சி.பி., எனப்படும் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஜாபர் சாதிக்கை மையப்படுத்தி, தமிழகம் போதை பொருள் கடத்தல் மையமாக இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து பிரதமரே கூறி இருக்கிறாரே என, கேட்கிறீர்கள்.
தமிழகத்தில் போதை பொருளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து புள்ளி விபரங்களை ஆதாரமாக வைத்து சொல்கிறோம். பேச்சு வழக்கில் சொல்லப்படுவது எப்படி சரியாக இருக்கும்?
தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அதிகளவில் போதை பொருள் கடத்தல் நடப்பதாக, கவர்னர் தமிழிசை தெரிவிக்கிறார். இதுவும் ஏற்புடையதாக இல்லை. வருவாய் புலனாய்வு பிரிவு, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை, கடலோர காவல் படையினர் அதிகளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்வதாக கூறுகின்றீர்கள்.
நாங்கள் போதை பொருள் குறித்து, சாலை ஓரம், தெருக்கள் என, அடிமட்ட அளவில் சென்று விசாரித்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுங்கத்துறை உள்ளிட்டோர் அப்படி அல்ல.
பத்து ஆண்டுகளுக்கு முன், காவல் துறையை விட, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, வருவாய் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்டோரால் கைது செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பறிமுதல் செய்யும் போதை பொருட்களும் அதிகமாக இருக்கும். தற்போது, காவல் துறையினர் தான் அதிகமான நபர்களை கைது செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
உடன், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் இருந்தார்.

