ADDED : நவ 06, 2025 07:31 AM

கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், 'பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்' என்ற பிரசாரத்தை, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துவக்கி உள்ளது.
தமிழக வரைபட பின்னணியில், பெண் ஒருவர் இரு கைகளால் முகத்தை மூடியபடி இருக்கும் ஓவியத்துடன், 'பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? நீங்கள் தீர்மானியுங்கள்' என்ற வரிகளுடன் கூடிய போஸ்டர்களை, தமிழகம் முழுதும் ஒட்டியுள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகி விட்டது. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை யாருக்கும், எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. இதைத்தான், அண்ணா பல்கலை மாணவி துவங்கி, கோவை மாணவி வரையிலான பாலியல் வன்கொடுமைகள் உணர்த்துகின்றன.
கோவை கல்லுாரி மாணவி பாலியல் வழக்கில், தி.மு.க., அரசை நோக்கி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் வழியில், 'பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்?' என மக்களிடம் கேட்கிறோம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

