போலீஸ் ராஜ்ஜியத்துக்கு நாடு செல்கிறதா; ஐகோர்ட் அச்சம்
போலீஸ் ராஜ்ஜியத்துக்கு நாடு செல்கிறதா; ஐகோர்ட் அச்சம்
ADDED : ஜூலை 25, 2025 10:17 PM
சென்னை:காதல் விவகாரத்தில், சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான, பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், 'இந்த வழக்கை பார்க்கும் போது, நாடு போலீஸ் ராஜ்ஜியத்துக்கு செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது' என, தெரிவித்துள்ளது.
காதல் திருமண விவகாரத்தில், திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் கடத்தப்பட்டான். திருவாலங்காடு போலீசார், இவ்வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜா, முன்னாள் எஸ்.ஐ., மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை, கடந்த மாதம், 13ல் கைது செய்தனர்.
இந்த கடத்தல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும் நிலையில், கைதான வனராஜா உள்ளிட்ட மூன்று பேர், தங்களுக்கு ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கியமானவர்கள், இன்னும் கைது செய்யப்படவில்லை. மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படும் என்ற வாதத்தை ஏற்று, மூவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ள போதும், தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் அறிக்கைகளை பார்க்கும் போது, விசாரணையில் போதுமான முன்னேற்றம் இல்லை என்பது தெரிகிறது. இதுவரை நடந்த விசாரணை நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இல்லை.
அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். சாதாரண மக்களின் வாழ்வு, சுதந்திரம் குறித்த கவலையை இவ்வழக்கு ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களாக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் சட்டசபை உறுப்பினர் ஒருவரும் உள்ளதால், காவல் துறை அறிக்கையில் கூறியபடி, விசாரணை முறையாக நடத்தப்படும் என்றும், காவல் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மீட்டெடுக்கப்படும் என்றும், இந்த நீதிமன்றம் நம்புகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.