அச்சுறுத்திய குற்றவாளி 'தியாகியா?' ஹிந்து முன்னணி கடும் எச்சரிக்கை
அச்சுறுத்திய குற்றவாளி 'தியாகியா?' ஹிந்து முன்னணி கடும் எச்சரிக்கை
ADDED : டிச 17, 2024 06:31 PM
திருப்பூர்:தமிழகத்தை அச்சுறுத்திய குற்றவாளியை, 'தியாகி' ஆக்கும் அரசியல் ஆபத்தானது என்று, ஹிந்து முன்னணி எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கோவை கோட்டை மேட்டை சேர்ந்த பாஷாவின் குற்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழகத்தை நிலைகுலையை வைத்ததை மறக்க முடியாது. 1983 முதல், 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வரை நடந்த பல கொடூர செயல்களை செய்ததால், 26 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பா.ஜ., தலைவர்களை இடைமறித்து தாக்கியது, ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலனை அரிவாளால் வெட்டியது உள்ளிட்ட பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றியது இந்த பாஷா தான். இந்த குற்ற செயல்களை செய்தபோதே சட்டம், தக்க தண்டனை கொடுத்திருந்தால், நுாற்றுக்கணக்கான தமிழர்கள் உயிர் போய் இருக்காது.
விடுதலை சிறுதைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள், பாஷாவை, தியாகியாக சித்திரிப்பது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். சட்டத்திலுள்ள ஓட்டைகளும், சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலும், இவரைப்போன்ற குற்றவாளிகளை தப்ப விட்டதால் தான், கடந்த, 40 ஆண்டுகளாக தமிழகம் பல பயங்கரவாத செயல்களினால் அழிவுகளை சந்தித்தது.
ஜிகாத் கமிட்டி என்ற அமைப்பையும், தொடர்ந்து, அல்-உம்மா என்ற அமைப்பையும் ஏற்படுத்தி, தமிழகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறி ஜிகாத் கொலைகள் நடக்க முழு முதல் காரணம் பாஷா தான்.
எனவே, தியாகி யார்? துரோகி யார்? என்ற விஷயத்தில், தமிழர்கள் தெளிவு பெற வேண்டும். குண்டு வைத்தவர்களையும் கொடூர படுகொலைகள் செய்தவர்களையும் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தால், சிறை தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று, தி.மு.க., - அ.தி.மு.க., துடிப்பது, எத்தகைய மனப்போக்கு என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கும் பொது அமைதியும் நீடித்து இருக்க வேண்டும் என்றால், அரசியல்வாதிகள் கொடூர குற்றவாளிகளுக்கு துணை போகக்கூடாது. குற்றவாளிகள் தண்டிக்க நீதியும், சட்டமும் போலீஸ் துறையும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.