பாரபட்சத்துடன் நிவாரணம் அறிவிப்பது தான் திராவிட மாடல் அரசா? கேட்கிறார் அன்புமணி!
பாரபட்சத்துடன் நிவாரணம் அறிவிப்பது தான் திராவிட மாடல் அரசா? கேட்கிறார் அன்புமணி!
ADDED : டிச 08, 2024 12:28 PM

கடலூர்: 'பாரபட்சத்துடன் நிவாரணம் அறிவிப்பது தான் திராவிட மாடல் அரசா? வட மாவட்டங்களில் மட்டும் பாரபட்சம் ஏன்?' என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
கடலூர் அருகே கண்டகாட்டில் பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பாதிக்கப் பட்டவர்களுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி மருத்துவப் பரிசோதனை செய்தார். அவர் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருந்து வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை அதிகரிக்க வேண்டும். மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் கூட வெள்ள பாதிப்புக்காக ரூ.6 ஆயிரம் பெற்றனர். கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மக்கள் பாவம் செய்தவர்களா? சென்னை, தூத்துக்குடி மக்கள் மட்டும் புண்ணியம் செய்தவர்களா?
நிவாரணம்
சென்னையில் வெள்ளம் வடிந்தும் 3வது, 6வது மாடியில் இருந்தவர்களுக்கு கூட ரூ.6 ஆயிரம் நிவாரணம் பெற்றனர். சென்னை, தூத்துக்குடிக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. கடலூர், விழுப்புரத்திற்கு மட்டும் ரூ.2 ஆயிரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரபட்சத்துடன் நிவாரணம் அறிவிப்பது தான் திராவிட மாடல் அரசா? வட மாவட்டங்களில் மட்டும் பாரபட்சம் ஏன்? அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் பாதிக்கப்பட்ட வீட்டைக்கூட சுத்தம் செய்ய பயன்படாது. இவ்வாறு அவர் கூறினார்.