ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய விரைவு நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய விரைவு நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்
UPDATED : டிச 22, 2024 01:50 PM
ADDED : டிச 22, 2024 01:43 PM

சென்னை: தமிழகத்தில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் பெரும் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும், தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறுவதைப் பார்க்கும் போது, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைப் போலத் தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? என்பதே தெரியவில்லை.
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழக அரசு இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.