UPDATED : ஜூலை 26, 2025 06:35 AM
ADDED : ஜூலை 26, 2025 04:47 AM

மதுரை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறை கடமைகளை நிறைவேற்றுவதில் ஜாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக கூறும் குற்றச்சாட்டை இன்னும் வலியுறுத்துகிறாரா என்பது குறித்த நிலைப்பாட்டை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராகி தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் இணை பேராசிரியராக பழனிவேலு நியமிக்கப்பட்டார். அவருக்கு போதிய தகுதிகள் இல்லை; நியமனம் சட்டவிரோதமானது. அதை ரத்து செய்து அப்பணியிடத்தில் தன்னை நியமிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை வெற்றிச்செல்வன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
தனி நீதிபதி,'தேர்வுக் குழு பரிசீலித்து பழனிவேலுவை நியமித்துள்ளது. விதிமீறல் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என 2022 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து வெற்றிச்செல்வன் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது கடமைகளை நிறைவேற்றும்போது ஜாதி, சமூக பாகுபாடு காட்டுகிறார் என அவதுாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எங்களின் கவனத்திற்கு வந்தது. இவ்வழக்கில் எதிர்மனுதாரரான பழனிவேலு சார்பில் ஆஜராகி வாதிட வாஞ்சிநாதன் வக்காலத்து தாக்கல் செய்ததை கவனித்தோம். எங்களில் ஒருவர் மீது தவறான நோக்கம் கற்பிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆஜராக உத்தரவிட்டோம். ஆஜரானார். நேரடியாக பதிலளிக்கவில்லை
நீதிபதி சுவாமிநாதன் கடமைகளை நிறைவேற்றும்போது ஜாதி பாகுபாட்டை வெளிப்படுத்துகிறார் என்பதை பற்றிய தனது நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து பராமரிக்கிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது. வாஞ்சிநாதன் நேரடியாக பதிலளிக்கவில்லை. அவர்,'பழனிவேலுவிற்காக ஆஜராகும் வழக்கறிஞர் நானல்ல. அவருக்கு ஆவணங்களை திருப்பி அனுப்பிவிட்டேன்,' என்றார். இவ்வழக்கில் வாஞ்சிநாதனின் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், நாங்கள் துவங்கிய நடவடிக்கை முடிவுக்கு வராது.பொருத்தமற்ற செயல்பாடு காரணமாக வஞ்சிநாதன் வழக்கறிஞராக தொழில் செய்ய இந்திய பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்ட பிறகு அவர் தனது செயலை மேம்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து நீதித்துறையை அவதுாறு செய்து வருகிறார். சமூக ஊடகங்களில் அவரது வீடியோக்கள் நிறைந்துள்ளன. தீர்ப்புகளை விமர்சிப்பது ஒன்று; ஆனால் நீதிபதிகளின் மீது குறை கூறுவது முற்றிலும் வேறு விஷயம்.
உச்சநீதிமன்றம் கூறுவது என்ன
உச்சநீதிமன்றம்,'நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் எந்தவொரு குடிமகனும் விமர்சிக்க முடியும் என்பதில் சந்தேகமும் இல்லை. இருப்பினும், நீதிபதியை குறைகூறவோ அல்லது நீதிபதியின் நல்லெண்ணத்தை கேள்விக்குள்ளாக்குவதோ அல்லது நீதிபதியின் திறன் குறித்து கேள்வி எழுப்பவோ உரிமை இல்லை. நீதிபதிகள் நீதி வழங்கும் அமைப்பின் ஒரு அங்கம். நீதிபதி மீதான அவதுாறான குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது.
இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிடில் முழு நீதி வழங்கும் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பர். இது சட்டத்தின் மாண்பை பாதிக்கும்,' என தெரிவித்துள்ளது.வாஞ்சிநாதனின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். நீதிபதி சுவாமிநாதன் தனது நீதித்துறை கடமைகளை செய்யும்போது ஜாதி ரீதியான பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாகக் கூறும் குற்றச்சாட்டை இன்னும் வாஞ்சிநாதன் நிலைநிறுத்துகிறாரா என நாங்கள் கேள்வி எழுப்பினோம். வாஞ்சிநாதன் பதிலளிக்க மறுத்துவிட்டார். இக்கேள்வியை எழுத்துப்பூர்வமாக எழுப்புமாறு எங்களிடம் வலியுறுத்தினார். அவர் ஜூலை 28 ல் நேரில் ஆஜராகி குற்றச்சாட்டு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

