அமைச்சர் ராஜினாமா செய்ய தயாரா? கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ.,க்கள் கைது
அமைச்சர் ராஜினாமா செய்ய தயாரா? கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ.,க்கள் கைது
ADDED : மே 10, 2025 01:21 AM

அரூர்,:சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரனிடம் ராஜினாமா செய்யத் தயாரா என, சவால்விடுத்த, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தசாமியை, தி.மு.க.,வினர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 90 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 2007ல் இணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகளின் பங்களிப்பு தொகை பெறப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் இணைமின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 2021ல், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இணைமின் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்படும்' என, தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கள ஆய்வுக்கூட்டம் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க நேற்று வந்தார். அவருக்கு பின்னால், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, (பாப்பிரெட்டிப்பட்டி), சம்பத்குமார் (அரூர்) ஆகியோர் வந்தனர். ஆலைக்குள் வந்த அமைச்சர் ராஜேந்திரனிடம், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ''சட்டசபையில் இணை மின்நிலையம் அமைக்கும் பணி, 45 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தகவல் கூறினீர்கள். அப்படி பணி நடந்திருந்தால், நான் என், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். இல்லையென்றால், உங்கள் பதவியை நீங்கள் ராஜினாமா செய்ய தயாரா?'' என, கேட்டு சவால் விடுத்தார். அதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின், கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரன் பேசி முடித்தவுடன், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசினார்.
அப்போது, ''இணைமின் நிலையம் அமைப்பது குறித்து நான் கேட்ட கேள்விக்கு, '89.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இணை மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது' என அதிகாரிகள் எனக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், பணி, 2015ல் கைவிடப்பட்டதாக ஆலையில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
''இந்த திட்டத்திற்காக பெறப்பட்ட பணம், பங்குதாரர்கள் பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், சட்டசபையில் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், 45 சதவீதம் பணி நடந்து முடிந்துள்ளது எனக் கூறினார்.
''கடந்த, 2015ல் பணி கைவிடப்பட்டது. அதற்காக விவசாயிகளிடம் பெறப்பட்ட பணமும் திருப்பி அளிக்கப்பட்ட நிலையில், 'இப்போது பணி நடக்கிறது' என, சட்டசபையில் பொய்யான தகவலை அமைச்சர் கொடுத்துள்ளார்,''என, கொந்தளிப்பாக பேசினார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.,வினர் கோஷமிட்டனர். இதனால், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாளர்கள், தி.மு.க.,வினர் என இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், எம்.எல்.ஏ.,க்களை நோக்கி தி.மு.க.,வினர் அடிக்க பாய்ந்தனர்.
இந்த சம்பவத்துக்குப் பின், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் மற்றும் அ.தி.மு.க.,வினர், 22 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.