தரமற்ற ரேஷன் பொருளா? அதிகாரிகளுக்கு இனி எஸ்.எம்.எஸ்., செல்லும்
தரமற்ற ரேஷன் பொருளா? அதிகாரிகளுக்கு இனி எஸ்.எம்.எஸ்., செல்லும்
ADDED : மே 16, 2025 11:40 PM
சென்னை:ரேஷன் கடைகளை, கூட்டுறவு துறை நடத்துகிறது. ரேஷனில் வழங்கப்படும் துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாக, அடிக்கடி புகார்கள் எழுகின்றன.
ஆய்வு செய்யும் போது தரமற்ற பொருட்கள் இருந்தால், ரேஷன் ஊழியர்கள், வாணிப கழகத்தின் மீதும் புகார் சொல்கின்றனர்.
வாணிப கழக அதிகாரிகளோ, ரேஷன் ஊழியர்கள் மீது புகார் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் தவறு செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் நடக்கும் விற்பனை விபரங்கள், பி.ஓ.எஸ்., எனப்படும் விற்பனை முனைய கருவியில் பதிவு செய்யப்படுகின்றன.
எனவே, ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், தரமற்ற பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தால், அந்த விபரத்தை, பி.ஓ.எஸ்., கருவியில் பதிவு செய்யும் வசதி துவக்கப்பட உள்ளது. அப்படி பதிவு செய்த உடனே, அந்த தகவல் எஸ்.எம்.எஸ்., வாயிலாக, நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் மற்றும் கூட்டுறவு அதிகாரிகளுக்கு செல்லும்.
இதன் வாயிலாக, தரமற்ற பொருள் எந்த கிடங்கில் இருந்து அனுப்பப்பட்டது; அதற்கு காரணமானவர்கள் யார் என்ற விபரங்களை விரைவாக தெரிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.