செயல்படுகிறதா தமிழ் நிலம் செயலி? பட்டா விபரங்கள் கிடைப்பதில்லை!
செயல்படுகிறதா தமிழ் நிலம் செயலி? பட்டா விபரங்கள் கிடைப்பதில்லை!
ADDED : டிச 04, 2025 05:44 AM

சென்னை: வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' மொபைல் போன் செயலியில், சொத்துக்களின் பட்டா விபரங்கள் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டா விபரங்களை சரிபார்க்க வேண்டும். இதில் பத்திரங்களின் முந்தைய பதிவு விபரங்கள், வில்லங்க சான்று வாயிலாக பார்க்கப் படுகின்றன.
அவசியம் இதில் சொத்துக்களின் விற்பனையை பதிவு செய்யும்போது பட்டா இருக்கிறதா என்பது சரி பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சொத்து வாங்கியவர்கள் மட்டுமல்லாது, புதிதாக சொத்து வாங்குவோரும் பட்டா விபரங்களை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
இதற்காக, இ - சேவை இணையதளத்தில், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பில் உள்ள பட்டா, 'அ' பதிவேடு, நில அளவை வரைபடம் ஆகிய விபரங்களை, பொது மக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை, மொபைல் போன் வாயிலாக மக்கள் பெற, புதிய செயலி, கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
பொது மக்கள் இதை பதிவிறக்கம் செய்து, பட்டா விபரங்களை எளிதாக பார்க்கலாம் என வருவாய் துறை அறிவித்தது. ஆனால், இந்த வசதி முறையாக செயல்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, இ - சேவை மையத்தினர் கூறியதாவது:
நுழைவு அனுமதி இதில் பட்டா விபரங்களை பார்க்க, மொபைல் போன் எண் கொடுக்க வேண்டும்.
அந்த எண்ணுக்கு, ஓ.டி.பி., எனப்படும் நுழைவு அனுமதி எண் கிடைப்பதில்லை. இந்த செயலியில், திரையில் தெரியும் பட்டாவை பதிவிறக்கம் செய்யவும், பிரதி எடுக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நில அளவை வரைபடங்கள், 'அ' பதிவேடு பிரதிகள் எடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழ் நிலம் செயலியில் தொழில்நுட்ப ரீதியாக வரும் பிரச்னைகளை கண்காணித்து வருகிறோம். இந்த வசதியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.

