இணையதள சேவையில் பிரச்னையா? 'மை ஸ்பீட்' செயலியில் உடனடி தீர்வு!
இணையதள சேவையில் பிரச்னையா? 'மை ஸ்பீட்' செயலியில் உடனடி தீர்வு!
ADDED : ஆக 19, 2026 11:02 PM
சென்னை: 'இணையதள வேகம் மற்றும் 'நெட்வொர்க்' இணைப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, 'மை ஸ்பீட்' செயலி வாயிலாக, புகார் அளித்தால், உடனடி தீர்வு காண முடியும்' என, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில், மொபைல் 'இன்டர்நெட்' மற்றும் 'பிராட்பேண்ட்' சேவைகளின் பயன்பாடு, பெருமளவில் அதிகரித்து வருகின்றன.
பல இடங்களில் வாடிக்கையாளர்கள் இணைய வேகம் குறைவது மற்றும் சிக்னல் கிடைக்காமல் தவிப்பது என, பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
இவற்றுக்கு தீர்வு காண, 'மை ஸ்பீட்' செயலியில் புகார் அளிக்கலாம் என, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' அறிவுறுத்தி உள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன் படுத்தும் இணையத்தின் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் வேகம் என்ன என்பதை துல்லியமாக, இந்த செயலியின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், பயனர்கள் பரிசோதிக்கும் இணைய வேகம் குறித்த தகவல்கள், நேரடியாக 'டிராய்' நிறுவனத்தின் தளத்திற்கு அனுப்பப்படுவதால், குறிப்பிட்ட தொலை தொடர்பு நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவையை வழங்குகிறதா என்பதை, எளிதில் கண்காணிக்க முடிகிறது.
இணைய சேவையில் அதிருப்தி அடைவோர், செயலியில் புகார் அளித்தால், சேவை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என, 'டிராய்' தெரிவித்துள்ளது.
