டெல்டாவில் சாக்கு தட்டுப்பாடா? அமைச்சர் சக்கரபாணி மறுப்பு
டெல்டாவில் சாக்கு தட்டுப்பாடா? அமைச்சர் சக்கரபாணி மறுப்பு
ADDED : அக் 10, 2025 01:20 AM

தஞ்சாவூர்:''டெல்டா மாவட்டங்களில், கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு கிடையாது,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுாரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தையும், பருத்தியப்பர் கோவிலில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கையும் நேற்று ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி:
தமிழகத்தில், டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடி பரப்பளவு, 6.31 லட்சம் ஏக்கராக அதிகரித்ததால், 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், 3.87 லட்சம் ஏக்கர் பயிரிடப்பட்டது. நேற்று வரை, 7.02 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக, 3.92 லட்சம் டன் கூடுதல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் நெல்லை, உடனுக்குடன் நகர்வு செய்ய நாளொன்றுக்கு 12க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் மூலமாகவும், 4,000க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாகவும் பிறமாவட்டங்களுக்கு அரவை முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் அதிகப்படியான நெல் வரத்து காரணமாக டெல்டா மாவட்டங்களில், 3.34 லட்சம் டன் கொள்ளளவு உடைய, 25 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, 69,883 டன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதலுக்கு தேவையான, 2.65 கோடி சாக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், சாக்கு தட்டுப்பாடு கிடையாது. தேவையான சாக்குகளை வாங்கி வர அதிகாரிகள் கொல் கட்டா சென்றுள்ளனர்.
டெல்டாவில் கொள்முதலை கண்காணிக்க, ஐந்து பொது மேலாளர்கள், நான்கு மேலாளர்கள் தலைமையில் ஒன்பது குழுக்களும், 12 மண்டல மேலாளர்கள் தலைமையில் 12 குழுக்களும் என, 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதுாரில், அமைச்சர் ஆய்வின் போது, அவரிடம் விவசாயிகள், 'அரசே எங்களை காவந்து பண்ணு' என, முழக்கமிட்டும், 12 நாட்களாக நெல்லை கொட்டி வைத்து இரவு, பகலாக காத்திருக்கிறோம் என முழக்கமிட்டும் வாக்குவாதம் செய்தனர். அப்போது பாதுகாப்பு க் காக வந்த போலீசார் மற்றும் தி.மு.க.,வினர், விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.