விவசாயத்தில் ரூ.2 கோடி வருமானமா? அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
விவசாயத்தில் ரூ.2 கோடி வருமானமா? அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : ஆக 13, 2025 03:56 AM

விவசாயத்தின் மூலம் 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியுமா?' என, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
இதற்கு எதிராக பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பன்னீர்செல்வம் அடிப்படையில் ஒரு விவசாயி. எனவே, அவர் விவசாயத்தின் வாயிலாக ஈட்டக்கூடிய வருமானத்தையும், அவரது சொத்து மதிப்பில் காட்ட உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது' என வாதங்களை முன் வைத்தார்.
வழக்கு தொடர்பான ஆ வணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், 'அமைச்சரின் மனைவி, 2 கோடி ரூபாயை, விவசாயத்திலிருந்து வருமானமாக ஈட்டியதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காலத்தில் 2 கோடி ரூபாயை, விவசாயம் மூலமாக ஒருவர் எப்படி வருமானமாக ஈட்ட முடியும்?' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'அமைச்சரின் மனைவி, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுகிறார். மேலும், வாகன விற்பனையிலும் ஈடுபடுகிறார். இதற்காக முறையாக வருமான வரியையும் செலுத்துகிறார். ஆனால், அவருடைய வருமானத்தையும் அமைச்சரின் வருமானத்துடன் இணைப்பது தான், இங்கு பிரச்னையே' என பதில் அளிக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'இது சம்பந்தமாக, உயர் நீதிமன்றத்தை மனுதாரர் நாடலாம்' என அறிவுறுத்தல் வழங்கி, மனுவை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பில் மனு திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது
- டில்லி சிறப்பு நிருபர் -.