ஆம்னி பஸ்கள் விவகாரத்தில் அண்டை மாநில அரசிடம் பேசுவதில் சிக்கலா: தமிழக அரசுக்கு நயினார் கேள்வி
ஆம்னி பஸ்கள் விவகாரத்தில் அண்டை மாநில அரசிடம் பேசுவதில் சிக்கலா: தமிழக அரசுக்கு நயினார் கேள்வி
ADDED : நவ 13, 2025 05:56 PM

சென்னை: ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதித்துள்ள விவகாரத்தில், கர்நாடகா, கேரளா மாநில அரசுகளிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன சிக்கல் என்ன இருக்கிறது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து நமது அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு இயக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு
இருமாநில அரசுகளும் கோடிக்கணக்கில் அபராதம் விதித்துள்ளனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடந்த 9.11.2025 தேதி மாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்கு நாட்கள் கழித்தும் கூட திமுக அரசு இவ்விவகாரத்தில் முழுமையான தீர்வு காண முயலாததால், தனியார் பஸ் ஊழியர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு, மற்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் தமிழக மக்களின் போக்குவரத்தும் பெரிதளவில் முடங்கியுள்ளது.
மத்திய அரசின் மீது பொய் வதந்திகளைப் பரப்புவதற்காக, ஒவ்வொருமுறையும் அண்டை மாநில அரசுகளைத் தேடிச் சென்று அவர்களை ஒன்றிணைக்கத் துடிக்கும் திமுக அரசுக்குத் தமிழக மக்களின் நலனுக்காக கேரளா, கர்நாடக அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன சிக்கல் என்பது தான் புரியவில்லை.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாது இந்தப் பிரச்சினையில் சுமூக தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, மக்களின் அன்றாடப் போக்குவரத்து வழிகளை அரசு எளிமைப்படுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

