திருப்பரங்குன்றத்தை 'சிக்கந்தர் மலை' என்பதா? மா.கம்யூ., சண்முகத்துக்கு கடும் கண்டனம்
திருப்பரங்குன்றத்தை 'சிக்கந்தர் மலை' என்பதா? மா.கம்யூ., சண்முகத்துக்கு கடும் கண்டனம்
ADDED : டிச 26, 2025 07:04 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை' என கூறிய மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக ஹிந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நான் தொடர்ந்த வழக்கில், 'திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை விதித்தும், அதை 'சிக்கந்தர் மலை' என அழைக்க கூடாது' என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து விஷம பிரசாரம் செய்கின்றனர். உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கில் மத மோதலை உண்டாக்கும் வகையில், சிக்கந்தர் மலை என பேசிய சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.
அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலர் ராமலிங்கம்: கார்த்திகை தீபமா, கலவர தீபமா என கூறி, தீப பிரச்னைக்கு வித்திட்டவரே மா.கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் தான். தீபத்துாணில் தீபம் ஏற்ற, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுமாறு மட்டுமே குரல் கொடுக்கிறோம். கலவரத்தை துாண்டும் போக்கில் செயல்படுவது கம்யூனிஸ்ட்டுகள் தான்.
தமிழக ஹிந்து துறவிகள் மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தா சுவாமி: நவாஸ் கனி எம்.பி.,யுடன் வந்தவர்கள், புனிதமான திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டுகளில் பிரியாணி சாப்பிட்டதை கண்டிக்க வாய் திறக்காத சண்முகம், 'சிக்கந்தர் மலை' என பேசுவது மோசமான போக்கு. கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவரது பேச்சு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

