UPDATED : செப் 21, 2024 04:37 AM
ADDED : செப் 21, 2024 04:07 AM

மதுரை: “நேற்று வரை சினிமாவில் நடித்த உதயநிதி, இன்று துணை முதல்வராகிறார் என்றால், அது தி.மு.க., குடும்பத்தில் மட்டும்தான் நடக்கும்,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு வருத்தமாக பேசினார்.
மதுரையில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
'எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., 10 நாட்கள் கூட இருக்காது' என கூறியவர் கருணாநிதி. ஆனால், ஒரே கையெழுத்தில் 22,000 ரேஷன் கடைகளை ஏற்படுத்தி, மக்களுக்கு இலவச அரிசி வழங்கியவர் எம்.ஜி.ஆர்., பல நலத்திட்டங்களை மக்களுக்கு செய்ததால் தான், இன்றும் அவர் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல், 'பழனிசாமி ஆட்சியும் நிலைக்காது' என்று பலரும் ஆட்சிக்கு ஆயுள் குறித்தனர். ஆனால், எல்லாருடைய எதிர்பார்ப்பு; கணக்குகளையெல்லாம் உடைத்து, நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக ஆட்சி நடத்தினார். 2026ல் பழனிசாமி தான் முதல்வர்.
மக்களுக்கு விரோதமாக அனைத்தையும் செய்து விட்டு, தற்போது தி.மு.க., ஷூட்டிங் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை, முதல்வர் ஸ்டாலின் நான்கு முறை வெளிநாடு சென்றுள்ளார். முதலீடுகளை ஈர்க்கப்போவதாகச் சொன்னார். என்ன முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என அவரால் சொல்ல முடியுமா?
அப்பா கருணாநிதி என்ற அடிப்படையில் மகன் ஸ்டாலின் முதல்வராகி உள்ளார். அதுபோல் நேற்றுவரை சினிமாவில் நடித்த உதயநிதி, தற்போது அமைச்சராக உள்ளார்.
'நான் பதவிக்கு வர மாட்டேன்' எனக் கூறிய உதயநிதி, தற்போது சட்டசபைக்குள் வந்தாலே சீனியர் அமைச்சர் உட்பட எல்லாரும் எழுந்து நிற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.