ADDED : ஏப் 15, 2026 04:05 AM

சென்னை: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, த.வெ.க., தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இதை நிறைவேற்றுவதற்கு சாத்தியமில்லை என, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள், 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்து, கடன் வாங்கியும், மக்களிடம் இருந்து திரட்டப்படும் டிபாசிட்டை வைத்தும், கடன் தருகின்றன.
அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பால், ஏழைகள் பயனடைந்தால் பரவாயில்லை. ஆனால், வசதியானவர்களும் பயன் பெறுகின்றனர். இதனால், மக்கள் பணம் தான் விரயமாகிறது. தள்ளுபடி தொகையையும், அரசு கூட்டுறவு நிறுவனங்களுக்கு, உடனே வழங்காமல், ஐந்தாண்டுகளுக்கு தவணை முறையில்தான் வழங்குகின்றன. இதனால், சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்கின்றன.
எனவே, இதை தடுக்கும் வகையில், 'கடன் தள்ளுபடி செய்யப்படும் தொகையை, தவணை முறையில், சங்கங்களுக்கு அரசு வழங்கக் கூடாது; தள்ளுபடி தொகை முழுதையும் ஒரே தவணையில், 45 - 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும்; இல்லையெனில், நிலுவைத் தொகை வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருக்கும்' என, 2024ல் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே, தமிழகம் உட்பட பல மாநில அரசுகள், நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், எந்த அரசாலும் தள்ளுபடி தொகையை முழுதுமாக, அதுவும் இரு மாதங்களுக்குள் வழங்க முடியாது. இதன் காரணமாகவே, தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை வழங்கவில்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
