ஐ.எஸ்., தமிழக தலைவர் அல்பாசித்தின் கூட்டாளிகள் மயிலாடுதுறையில் பதுங்கல்
ஐ.எஸ்., தமிழக தலைவர் அல்பாசித்தின் கூட்டாளிகள் மயிலாடுதுறையில் பதுங்கல்
ADDED : பிப் 01, 2025 04:43 AM

சென்னை:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் அல்பாசித் கூட்டாளிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலை சேர்ந்தவர் அல்பாசித், 42. சென்னை புரசைவாக்கத்தில், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் போல தங்கியிருந்த இவர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவராக செயல்பட்டு வருவதாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அல்பாசித்தின் சொந்த ஊரில், அவரால் பயங்கரவாத அமைப்பில் சேர மூளைச்சலவை செய்யப்பட்ட, 15 பேர் வீடு உட்பட, 20 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அத்துடன், சென்னை புரசைவாக்கத்தில், அல்பாசித் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையில், பயங்கரவாத அமைப்பு தொடர்பான புத்தகம், துண்டு பிரசுரம் மற்றும் ஆவணங்கள், தற்காப்பு பயிற்சிக்கான ஆயுதங்கள் சிக்கின.
அவற்றில், அல்பாசித் கூட்டாளிகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருந்தன. அதன் அடிப்படையில் தொடர் விசாரணை நடக்கிறது.
என்.ஐ.ஏ., அதிகாரிகள், மயிலாடுதுறையில் முகாமிட்டு, தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், 'அல்பாசித் கூட்டாளிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரகசிய சந்திப்பு நடத்திய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது' என்றனர்.