ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்கள் நடத்த தமிழகத்தில் அனுமதி கிடையாதா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்கள் நடத்த தமிழகத்தில் அனுமதி கிடையாதா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
UPDATED : அக் 15, 2026 12:18 AM
ADDED : அக் 14, 2026 08:56 PM

சென்னை: 'ஜம்மு - காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த இடங்களில் கூட, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது; அமைதி பூங்காவான தமிழகத்தில் மட்டும் அனுமதி கிடையாதா; எதற்காக இந்த விஷயத்திற்கு எல்லாம் நீதிமன்றத்தை நாட வைக்கிறீர்கள்' என, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும், சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாநில செயலர் ஜெகதீசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தமிழகம் முழுதும் விவேகானந்தர், அம்பேத்கர் ஆகியோரின் பொன் மொழிகளை விளக்கி, பொது மக்களிடம் சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக விஜயதசமி பண்டிகையின்போது, ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, சீருடை அணிந்து, அணிவகுப்பு நடத்தப்படும்; தொடர்ந்து, பொது கூட்டமும் நடத்தப்படும்.
பேரணி
அதேபோல், இந்த ஆண்டு, வரும் 18 அல்லது 25 அல்லது நவம்பர் ஒன்றாம் தேதியில், பேரணி நடத்த அனுமதி கோரி, டி.ஜி.பி.,யிடம் விண்ணப்பம் அளித்தும், எந்த பதிலும் கிடைக்ககவில்லை. எனவே, மாநில முழுதும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா வாதாடியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் நடத்தப்படும் பேரணிக்கு, காவல் துறை அனுமதி மறுக்கப்படுக்கிறது. இதன் காரணமாக, அனுமதி வழங்க கோரி, நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., போன்ற ஒரு அமைப்பால், நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோர முடிகிறது. ஆனால், நீதிமன்றத்தை அணுகுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாத, சிறிய கட்சிகளின் நிலை என்ன?
சட்டம் -ஒழுங்கு
ஒவ்வொரு ஆண்டும் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என கூறி, காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது. விஜயதசமி கொண்டாட்டங்கள் நடக்கும் அதே நாளில், அமைப்பின் நிறுவன தினத்தை கொண்டாடவும், பேரணி நடத்தவும் மட்டுமே அமைப்பு விரும்புகிறது. இவ்வாறு அவர் வாதாடினார்.
காவல் துறை தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''பேரணி நடத்த அனுமதி கோரி, 21 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் இருக்கும் நிலையில், அக்., 3ம் தேதி தான், அமைப்பு சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
பேரணி நடத்த திட்டமிடும் வழித்தடம், அனுமதி அளிக்க முடியாத பகுதி. பண்டிகை காலத்தில் அனுமதி அளித்தால், பொது மக்களுக்கு அசவுகரியம் ஏற்படும்,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தும், ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?
தமிழகத்தில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆர்.எஸ்.எஸ்., பேரணி மற்றும் பொது கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய த.வெ.க., அரசு, தி.க., - தி.மு.க., - அ.தி.மு.க., - ஆர்.எஸ்.எஸ்., என, அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பேரணி உள்ளிட்டவைக்கு அனுமதி மறுத்து வருகிறது.
கட்டாயம்
இதன் காரணமாக, அவர்கள் நீதிமன்றத்தை நாடி தேவையற்ற சட்டப் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த அரசு, எந்தவொரு பேரணிக்கும் அனுமதி அளிப்பதில்லை.
ஜம்மு- - காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளிலேயே பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படும் நிலையில், அமைதி பூங்கா என சொல்லப்படும் தமிழகத்தில் மட்டும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு பேரணி நடத்த, ஏன் காவல் துறை ஒவ்வொரு ஆண்டும் அனுமதி மறுக்கிறது?
அனுமதியை மறுத்து தேவையற்ற விளம்பரத்தை, மாநில அரசு ஏற்படுத்தி தருகிறது. அரசு, மக்களை தன் எதிரிகளாக பார்க்கிறது. அதனால்தான் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கோரிக்கையை நிராகரிக்கிறது.
இவ்வாறு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து, ''இந்த விவகாரம் தொடர்பாக, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யனுடன் பேச்சு நடத்த, மனுதாரர் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் செல்லலாம்,'' என, உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை இன்று தள்ளிவைத்தார்.
