படகுகளில் இஸ்ரோ 'டிரான்ஸ்பாண்டர்' கருவி; ஆழ்கடலில் இருந்து அவசர செய்தி அனுப்பலாம்
படகுகளில் இஸ்ரோ 'டிரான்ஸ்பாண்டர்' கருவி; ஆழ்கடலில் இருந்து அவசர செய்தி அனுப்பலாம்
ADDED : டிச 29, 2024 05:07 AM

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி லாஞ்சியடி மீனவ கிராம விசைப்படகுகளில், மீன்பிடி தொழிலின் போது தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொள்ளும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கிய, 'டிரான்ஸ்பாண்டர்' கருவி பொருத்தும் பணி நடக்கிறது.
இதுகுறித்து, மரைன் போலீசார் கூறியதாவது:
மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்த, மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கி உள்ளது. நிலப்பரப்பிலிருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்களால் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். புளூ டூத் வாயிலாகவும் இணைத்து, மொபைல் போன் செயலியாலும் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
மேலும், டிரான்ஸ்பாண்டர்களை மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் மீன்பிடி படகுகள் இருக்கும் போது, ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும், மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும்.
அதேபோல், கரையிலுள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, பகிரவோ முடியும். அதுமட்டுமின்றி, அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரம் ஆகியவற்றை குறித்தும் படகிற்கு செய்தி அனுப்ப இயலும்.
ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து, ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

