பறிமுதல் செய்யும் ரூபாய் விபரம் செயலியில் பதிவிடுவது கட்டாயம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
பறிமுதல் செய்யும் ரூபாய் விபரம் செயலியில் பதிவிடுவது கட்டாயம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
UPDATED : மார் 13, 2026 02:52 PM
ADDED : மார் 13, 2026 12:26 AM

- நமது நிருபர் -
சட்டசபை தேர்தலின் போது உரிய ஆவணமின்றி பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்களின் விபரங்களை இ.எஸ்.எம்.எஸ்., செயலியில் கட்டாயம் பதிவிட வேண்டும் என அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க சட்டபை தொகுதிகளில் பறக்கும் படை, நிலைகண்காணிப்பு குழு, வீடியோ பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வருவாய் உள்ளிட்ட அரசுத் துறையினர், போலீசார் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள போது உரிய ஆவணங்கள் இன்றி, 50,000 ரூபாய்க்கு மேல் பணம், பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
அவற்றின் விபரங்களை இ.எஸ்.எம்.எஸ்., செயலியில் உடனடியாக பதிவு செய்ய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது: கடந்த தேர்தலிலும் இந்த செயலி பயன்பாட்டில் இருந்தது. ஆனால், 'நெட்வொர்க்' பிரச்னை யால் விபரங்களை செயலி யில் பதிவு செய்யாமல் கருவூலங்களில் நேரடியாக ஒப்படைத்தோம். வரும் சட்டசபை தேர்தலில் இச்செயலி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
'ஆப்லைனில்' செயல்படும் வகையில் செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பறிமுதல் செய்யும் பணம், பொருட்களின் விபரங்களை உடனடியாக பதிவு செய்ய குழுவினரிடம் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

