ராகுலை கைது செய்ய நினைப்பது சாதாரண விஷயமல்ல: சசி தரூர்
ராகுலை கைது செய்ய நினைப்பது சாதாரண விஷயமல்ல: சசி தரூர்
ADDED : ஜன 27, 2024 02:02 AM

சென்னை: 'முற்போக்கு இந்தியாவை உருவாக்குவதில் தொழில் முனைவோரின் பங்கு' என்ற தலைப்பில், தொழில் வல்லுனர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சசி தரூர் பதிலளித்து பேசியதாவது:
இந்திய தொழில் முனைவோருக்கு, அரசிடமிருந்து வரி சலுகைகளுடன் போதுமான நிதியுதவி தேவைப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு மூன்று ஆண்டு வரி விலக்கு தேவை. முதலில் தொழில் முனைவோருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
சாலை, மின்சாரம் போன்ற தொழில் முனைவோருக்கான உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதில், நாடு பின்தங்கியுள்ளது. தொழில் முனைவோர்களும் அரசியலில் இருக்க வேண்டும்.
சிறந்த இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையை கொண்டிருக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கு உள்ளது.
இவ்வாறு சசி தரூர் பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர், தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டியிட இருப்பதாக அறிவித்தாலும், தேர்தலுக்கு பின், 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவளிப்பர்.
கட்சிகளுக்கு இடையோன கூட்டணியில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் இருந்தாலும், தமிழகத்தில் தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.
ராகுலை கைது செய்வோம் என, அசாம் மாநில முதல்வர் கூறியுள்ளார். சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி ராகுலை எளிதில் கைது செய்து விடலாம் என்று அவர் நினைக்கிறார்; அது ஒன்றும் சாதாரண விஷயமல்ல.
ஒருவேளை ராகுலை கைது செய்ய முயன்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

