'பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவியில் நீடிப்பது முறையல்ல'
'பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவியில் நீடிப்பது முறையல்ல'
ADDED : நவ 20, 2025 12:13 AM
சென்னை: ''பதவி காலம் முடிந்தும், பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவியில் நீடிப்பது ஜனநாயக விரோதம்,'' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், வழக்கறிஞருமான வேல்முருகன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 1.40 லட்சத்துக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உள்ளனர். வழக்கறிஞர் பதிவு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளும், தமிழக பார் கவுன்சிலுக்கு, கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் நடந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தற்போது உள்ள பார் கவுன்சில் நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்து விட்டது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
ஏற்கனவே பதவியில் உள்ள நிர்வாகிகள், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதவியில் நீடிப்பது, ஜனநாயக விரோதம்.
இதுதொடர்பாக, பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் தொடர்ந்த வழக்கில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்; எந்த கால நீடிப்பும் செய்யக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
மேலும், பார் கவுன்சில் தேர்தலை நடத்த, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

