'சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை'
'சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை'
UPDATED : பிப் 14, 2024 07:24 AM
ADDED : பிப் 14, 2024 01:22 AM

சென்னை: ''இந்தியாவிலேயே சாலை விபத்துக்களில், தமிழகம் முதலிடத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்து துறை இயக்கூர்திகள் துறை சார்பில், சென்னை, சேப்பாக்கத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது.
இதை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவங்கி வைத்தார். அரசு விருந்தினர் மாளிகையில் துவங்கிய பேரணி, தீவுத்திடல் வரை நடந்தது.
பின், அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துக்களில், தமிழகம் முதலிடத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது. இதில், 50 சதவீதத்துக்கு அதிகமானோர், 19 முதல் 32 வயதுக்குட்பட்டே உள்ளனர்.
அதேநேரம், ஓட்டுனர்களின் கவனக்குறைவும் சாலை விபத்துக்கு மிகப்பெரிய காரணம். எனவே, சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பான கருத்துக்களை முன்வைத்து பேரணி நடத்தப்படுகிறது.
முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தால், இரண்டு ஆண்டுகளாக விபத்துகள் சற்று குறைந்திருந்தாலும், முற்றிலும் இல்லாத நிலை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பின் இருக்கையில் அமர்ந்திருப்போரும், தலைக்கவசம் அணிய வேண்டும் என, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

