தி.மு.க.,விடம் பணம் பெற்றது உண்மை; திரும்ப கொடுத்ததாக கூறும் கம்யூனிஸ்ட்
தி.மு.க.,விடம் பணம் பெற்றது உண்மை; திரும்ப கொடுத்ததாக கூறும் கம்யூனிஸ்ட்
UPDATED : ஜூலை 20, 2025 05:05 AM
ADDED : ஜூலை 20, 2025 02:24 AM

திருவாரூர் : ''பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது,'' என, மார்க்சிஸ்ட் மாநிலச்செயலர் சண்முகம் கூறினார்.
திருவாரூரில், அவர் அளித்த பேட்டி:
திருவாரூர் மாவட்டத்தில், பிரசாரம் செய்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கம்யூ.,கட்சிகள் போராட்டத்தை கைவிட்டு, ஜால்ரா தட்டுவதாக கூறியிருக்கிறார்.
அவர், கூறுவது வேடிக்கையாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மா. கம்யூ., எவ்வளவு போராடி இருக்கிறது என, நாளிதழை, படித்து பார்த்தால் தெரியும். நான்கு ஆண்டுகளில், எதிர்க்கட்சியாக, அ.தி.மு.க., எத்தனை போராட்டங்களை நடத்தியது. பழனிசாமி, பா.ஜ.,வுடன் சேர்ந்து கொண்டு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கை.
நாங்கள் பணம் வாங்கியதாக, 2019ல் இருந்தே பழனிசாமி கூறுகிறார். இதற்கு, 100 முறை விளக்கம் கொடுத்து விட்டோம். தி.மு.க.,விடம், தேர்தல் செலவிற்காக வாங்கிய பணத்தை அப்படியே கொடுத்துவிட்டோம். அதில், சிங்கிள் டீ கூட சாப்பிடவில்லை.
'கம்யூனிஸ்ட்டுகள் உண்டியலை கைவிட்டனர்; சூட்கேசை பார்க்கின்றனர்' என, தமிழிசை கூறுகிறார். உண்டியல் குலுக்குவது கேவலம் அல்ல. தேர்தல் பத்திரம் வாயிலாக, அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற பெரும் முதலாளிகளிடம் இருந்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பாஜ.,வினர் பெற்று உள்ளனர்.
பா.ஜ., - அ.தி.மு.க., இடையே கூட்டணி குழப்பம் உள்ளது. அமித் ஷா கூறியதுபோல், கூட்டணி ஆட்சிதான் என, அண்ணாமலை போன்றோர் கூறுகின்றனர். தனி மெஜாரிட்டியுடன் அ.தி.மு.க.,ஆட்சி என, பழனிசாமி கூறுகிறார். இந்த கூட்டணியில் வாசன் மட்டுமே உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.