ADDED : அக் 29, 2025 03:52 AM

சென்னை: 'நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில், மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய கொள்கை முடிவுகளை, முடக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத் துறை நிறுவனங்களாக மாற்றுவதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.
ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற, கடந்த 2021ம் ஆண்டு ஜூனில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக, ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில், மத்திய அரசு முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற அசாதாரண கொள்கை முடிவுகளை முடக்கும் வகையிலான, இந்த எதிர்ப்புகளை ஏற்க முடியாது.
ஒரு வேளை போர் அறிவிக்கப்பட்டு, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களில் இருப்பில் இருந்த ஆயுதங்கள்தீர்ந்து, மேலும் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அரசு அவசர முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
அதிக உற்பத்தி திறனுடன், சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்யவே, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத் துறை நிறுவனங்களாக மாற்ற, நீண்ட விவாதங்களுக்கு பின், மத்திய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

