UPDATED : நவ 07, 2026 06:21 PM
ADDED : நவ 07, 2026 06:18 PM

யு.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் பாலகுருசாமி:
அறிவை மேம்படுத்தும் நுாலகத்திலும் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. புத்தக கொள்முதலில் நிதி முறைகேடுகள் மட்டுமின்றி, தரமற்ற மற்றும் தவறான தகவல்கள் கொண்ட புத்தகங்களும் வாங்கப்பட்டிருப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது.
பதிப்பகங்களின் முறையான அனுமதியின்றி, மறுபதிப்பு செய்யப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் விபரங்கள், நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடு குறித்து விசாரித்து இதற்கு பின்னால் யார் என, தெரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கல்வியாளர் அஸ்வின்:
புத்தகங்கள் என்பது அடுத்த தலைமுறையை உருவாக்கும் கருவி. அந்த நுால்களில் உண்மைதன்மையில் முறைகேடு நடப்பது இளைஞர்கள் நம் நாட்டின் மீதும், ஆட்சி அமைப்பின் மீதும், ஏன் அவரவர் மீதே நம்பிக்கையை இழந்து விடுவார்கள். தவறான நுால்களால் தவறான தகவல்கள் இளைஞர்களை சென்றடையும். முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்படும் அனைத்து புத்தகங்களையும் அழித்து விடவேண்டும். தரமான புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் அன்வர் பாஷா:
வாய் மொழி பேச்சு காற்றோடு போய்விடும். ஆனால், புத்தக பதிவுகள் காலங்களை கடந்து செல்லும். ஆய்வாளர்கள், வெளிநாட்டவர்கள் தவறான பதிவுகளை கொண்ட புத்தகங்களை படித்தால் நம் வரலாறு, கலாசாரம் தவறாக போகாதா? இதை அரசு முழுமையாக விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும். தவறான பதிப்புகள், தகவல்களை கொண்ட புத்தகங்களை அழித்துவிடவேண்டும்.
