ADDED : மார் 05, 2024 06:20 AM

மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை சார்பில், இயற்கை இடர்பாடுகளால் சேதமான விசைப்படகிற்கு, சுழல் நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான ஆணையை, சீர்காழி தாலுகா பூம்புகாரை சேர்ந்த ரமேஷ் என்ற பயனாளிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அந்த நிவாரண ஆணையை ரமேஷ், முதல்வரிடமே திருப்பிக் கொடுத்தார். அவர் வாங்காததால் அருகில் இருந்த அமைச்சர் வேலுவிடம் கொடுத்தார். அவரும் வாங்க மறுத்ததால், பக்கத்தில் இருந்த அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் கொடுத்து விட்டு சென்றார்.
நிவாரணத்தொகை குறைவாக இருந்ததால், முழு தொகையையும் வழங்குமாறு கூறி, ஆணையை திருப்பிக் கொடுத்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. தொடர்ந்து மேடையை விட்டு இறங்கிய ரமேஷை போலீசார் அழைத்துச் சென்று நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, மாலையில் செய்தியாளர்களை சந்தித்த ரமேஷ், ''நான் பரம்பரை தி.மு.க.,காரன். முதல்வர் வழங்கிய நிவாரண ஆணையில் பெயர் மாறி இருந்ததால், திருப்பிக் கொடுத்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. படகு மூழ்கியதற்கு நிவாரணத் தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி,'' என்றார்.
நிவாரண ஆணையை திருப்பிக் கொடுத்து விட்டு, அதிகாரிகள் விசாரணைக்கு பின், தி.மு.க.,வினர் முன்னிலையில் மீனவர் பல்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

