வெளியாட்கள் வில்லங்க சான்றிதழ் பெறுவதை இனி எளிதாக அறியலாம்; பதிவுத்துறை புதிய நடவடிக்கை
வெளியாட்கள் வில்லங்க சான்றிதழ் பெறுவதை இனி எளிதாக அறியலாம்; பதிவுத்துறை புதிய நடவடிக்கை
ADDED : நவ 26, 2025 12:43 AM

சென்னை: சொத்துக்களின் வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்களை வெளியாட்கள் பெற்றால், அதுகுறித்து அசல் உரிமையாளருக்கு தகவல் தெரிவிப்பதற்கான புதிய வசதியை ஏற்படுத்த பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அசல் உரிமையாளருக்கு தெரியாமல் சொத்துக்களை வெளியாட்கள் அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் அடிப்படையில், சொத்து அபகரிப்பு நடக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும், மோசடி பத்திரங்களை ரத்து செய்ய பதிவுத்துறை மறுத்து வருகிறது. சொத்தின் அடிப்படை விபரங்களை, யார் வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம் என்ற சூழலை, மோசடி நபர்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில், சொத்தின் வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்களை, 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தி பெறலாம். இதனால், சொத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள், இந்த விபரங்களை எளிதில் பெற வாய்ப்பு ஏற்படுகிறது.
இதில், தங்களது சொத்துக்கான வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரத்தை யார் யார் பெற்றனர் என்பது உரிமையாளர்களுக்கு தெரிவதில்லை.
இந்த விபரங்கள், சொத்தின் அசல் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வழி என்ன என்று, உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு கேள்வி எழுப்பியது. இதற்கான வாய்ப்புகளை பரிசீலிப்பதாக, பதிவுத்துறை தெரிவித்தது. தற்போது, அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சொத்து பத்திரப்பதிவின் போது, ஆதார் எண், மொபைல் போன் எண் போன்ற விபரங்கள் தற்போது பெறப்படுகின்றன.
இதை அடிப்படையாக வைத்து, வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்களை வெளியாட்கள் பெற்றால், அதுகுறித்த தகவல்களை அசல் உரிமையாளர்களின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
பத்திரப்பதிவுக்கான கணினி மென்பொருளில் இதற்கான வசதியை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், சம்பந்தம் இல்லாத நபர்கள், வில்லங்க சான்று விபரம் பெற்றால், மோசடி பத்திரப்பதிவு நடப்பதை, உரிமையாளர்கள் தடுக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

