சமபந்தி விருந்தால் பட்டியலினத்தவருக்கு அவமானம்: எழுத்தாளர் சோ.தர்மன்
சமபந்தி விருந்தால் பட்டியலினத்தவருக்கு அவமானம்: எழுத்தாளர் சோ.தர்மன்
ADDED : ஆக 14, 2025 08:01 AM

சென்னை: 'சமபந்தி விருந்து நடத்துவது பட்டியலினத்தவருக்கு பெரும் அவமானம்' என, 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவு: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பெரிய கோவில்களில், 'சமபந்தி விருந்து' என்ற ஒன்றை நடத்துகின்றனர். இதற்கு அரசு பணம் ஒதுக்குகிறது.
அதாவது, ஏதாவது ஒரு மண்டபத்தில், அரசின் செலவில் சமையல் செய்து விருந்து வைக்கின்றனர்; ஊடகங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.
மறுநாள், 'சமபந்தி விருந்தில் அனைத்து ஜாதியினரும் சரிசமமாக அமர்ந்து விருந்து உண்டனர்' என, செய்தி வரும். ஒரு காலத்தில் பட்டியலினத்தவர்கள், தீண்டத்தகாதவர்களாக இருந்தனர்; மற்றவர்களுடன் சரிசமமாக அமர்ந்து, உணவருந்தும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது என்பதை நினைவூட்டுவதே, சமபந்தி விருந்தின் நோக்கம்.
'தீண்டாமை சமூகத்தில் இல்லை; அனைவரும் சமமாகவே உள்ளனர்' என்ற கருத்தை சமூகத்துக்கு விதைக்கவே அப்படியொரு ஏற்பாடு இருந்தது. ஆனால், இன்றைக்கும் அதை கடைப்பிடிப்பது எத்தனை பெரிய அவமானம்?
அன்றாடம் அனைத்து ஹோட்டல்களிலும் அனைவரும் சரிசமமாக அமர்ந்து, மூன்று வேளையும் சாப்பிடுகின்றனர். அப்படியென்றால், அது என்ன விருந்து? ஜாதியை ஒழிக்கவில்லை என்றாலும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. பொது இடங்களில் பட்டியலினத்தவர் தனிமைப்படுத்தப்படுவதில்லை.
சட்ட ரீதியான பாதுகாப்பு இருக்கிறது. தனியாக தீண்டாமை ஒழிப்பு போலீஸ் இருக்கிறது. ஜாதி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணி திரண்டு போராடுகின்றனர். அப்படியிருக்க, பழைய கால நிலைமைகளை நினைவுபடுத்தும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி, இன்றைக்குத் தேவையில்லை.
பட்டியலின ஜாதி மக்களை மூலதனமாக வைத்து, கட்சி நடத்தும் ஜாதிக் கட்சித் தலைவர்களே, இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? தீண்டாமைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளே, நீங்கள் மவுனமாக இருப்பது ஏன்?
முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, சமபந்தி விருந்து தேவையற்றது என்பதை நினைவூட்டி நிறுத்துங்கள். அந்தந்த மாவட்ட நிர்வாகமே முடிவெடுத்து நிறுத்தி விடலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.