களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை; விஜய் மீது சீமான் பாய்ச்சல்
களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை; விஜய் மீது சீமான் பாய்ச்சல்
UPDATED : டிச 20, 2025 02:30 PM
ADDED : டிச 20, 2025 02:25 PM

திருச்சி: களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: களத்தில் இருப்பவர்கள் பற்றி பேசுவோம். களத்தில் யார் இருக்கிறார்? கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி தொகுதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் நிற்காமல் போனது ஏன்? ஈரோட்டில் வந்து நிற்க வேண்டியது தானே? திமுகவும், நாம் தமிழர் கட்சி மட்டும் தானே மோதியது. எல்லோரும் போய் விட்டார்கள். இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜ வரவில்லை.
அதிமுக வரவில்லை. களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? ஈரோடு கடப்பாரை என விஜய் யாரை சொல்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? ஈரோட்டு கடப்பாரையா? அதெல்லாம் துருப்பிடிச்சு, பழைய இரும்புக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்கியாச்சு. இப்பதான் தெரிய வருது.. அப்போ தெரியலையா தீய சக்தினு?
நான்கு எதிரிகள்
என் தம்பிக்கு (விஜய்) ஒரே ஒரு எதிரி தான், ஆனா எனக்கு நாலு எதிரிங்க. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகன்னு நாலு பேரோட நான் மல்லுக்கட்டுறேன். தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும், ஆனா களத்துல நாங்க யாருன்னு இந்த நாலு பேருக்கும் நல்லாவே தெரியும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மறைந்த தலைவர்களின் பெயரைச் சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்? கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்பது நாங்கள் மட்டும் தான்; மற்றவர்கள் சின்னத்தை காட்டியும், பணத்தை காட்டியும் தான் ஓட்டு கேட்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால், அது நோட்டில் இருக்கும் காந்திக்கு போடும் ஓட்டு.
காதில் பூ சுற்றும்...!
கொரோனா காலத்தில் நர்ஸ்களை'கடவுள்', 'தேவதை' என்று கொண்டாடினார்கள்; இன்று அவர்கள் தெருவில் நின்று போராடும்போது கண்டுகொள்ள ஆளில்லை. பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது அவர்களைத் தூக்கி எறிவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மதத்திற்காக மனிதன் இல்லை, மனிதனுக்காகவே மதம் உருவானது, உடம்புக்குத்தான் சட்டை தேவை, சட்டைக்காக உடம்பு இல்லை.1000 ரூபாயில் ஆடு, மாடு வாங்கிப் பெருகிவிட்டதாகச் சொல்வதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இல்லையா?
1 கோடி பேர்
19,000 கள்ள ஓட்டு இருக்குன்னு அப்பவே மத்திய அமைச்சருக்குத் தெரிந்தால், ஏன் அந்தத் தேர்தல் முடிவை ரத்து செய்யவில்லை? நாலரை வருடமா சும்மா இருந்துட்டு, அடுத்த தேர்தல் வரும்போது இதைக் கையில் எடுப்பது ஏன்? நீங்கள் வென்ற பீஹாரில் எல்லாம் கள்ள ஓட்டே இல்லையா? களையெடுக்கப் போறேன் என்று சொல்லி, மொத்த நிலத்தையும் உழுதுவிட்ட கதையாக உள்ளது. ஒரு கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம் என்பது சாதாரண பிழை திருத்தம் அல்ல; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். தேர்தல் நெருங்கும் நேரத்தில், குறுகிய காலத்தில் மீண்டும் எப்படி 1 கோடி பேரை சேர்ப்பீர்கள்? வாக்காளர்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்த காலம் போய், இன்று ஆட்சியாளர்கள் வாக்காளர்களைத் தேர்வு செய்யும் அவலம்.
5000 கோடியா?
வருடம் முழுவதும் உழைத்தும், தன் வீட்டுப் பண்டிகையை சொந்தக் காசில் கொண்டாட முடியாத நிலையில் மக்கள் இருப்பது தேசிய அவமானம். இலவச வேட்டி, சேலை, கரும்பு கொடுப்பது ஆட்சியின் சாதனை அல்ல; அது மக்களின் வறுமையின் சாட்சி. படிக்கிற பிள்ளைகள் இருக்கும் பள்ளிக்கூடத்தை ஒழுங்காகக் கட்டவில்லை; ஆனால் பறப்பதற்கு விமான நிலையத்திற்கு 5000 கோடியா? வகுப்பறையில் தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப் படுகிறது. ஆனால், கல்விக்கூடங்களை விட்டுவிட்டு ஆடம்பரத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது வளர்ச்சியல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.

