இது உங்கள் இடம்: லோக்சபாவை சோனியா தவிர்த்தது ஏன்?
இது உங்கள் இடம்: லோக்சபாவை சோனியா தவிர்த்தது ஏன்?
ADDED : பிப் 18, 2024 01:03 AM

வெ. சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்., முன்னாள் தலைவர் சோனியா, தன் மாமியாரான இந்திரா வழக்கமாக நிற்கும் உ.பி., மாநிலம், ரேபரேலியில் நின்று, லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பக்கத்தில் இருக்கும் தொகுதியான அமேதியில் போட்டியிட்ட ராகுல், பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.
நல்லவேளையாக, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் களம் இறங்கி இருந்ததால், அங்கு ஜெயித்து, லோக்சபாவுக்குள் நுழைய முடிந்தது.
வரப்போகும் தேர்தலில், 'இண்டியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, ரேபரேலி, அமேதி தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய போதிலும், சோனியா, லோக்சபா தேர்தலை தவிர்த்து, ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாக, மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏனென்றால், லோக்சபா தேர்தலில் நின்று ஒருவேளை தோற்று விட்டால், டில்லியில் சோனியா வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டியிருக்கும். அதை தவிர்க்கவே, ராஜ்யசபா வாயிலாக பார்லிமென்டுக்குள் நுழைகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாடு முழுக்க எடுக்கப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளும், 'பா.ஜ.,வே மீண்டும் ஆட்சி அமைக்கும்' என, தெரிவிக்கின்றன. அதிலும், உ.பி.,யில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்றே கூறுகின்றன.
அமேதியிலும், கடந்த முறை தோற்றுப் போன ராகுல், இந்த முறை மீண்டும் களம் இறங்குவாரா என்பது கேள்விக்குறியே. பிரியங்கா, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்ற யூகங்களும் வலம் வருகின்றன. அப்படி அவர் போட்டியிட்டாலும், வெற்றியை ஈட்டுவாரா என்பது சந்தேகமே.
எனவே, பிரியங்கா, ராகுல் போன்றோர் இந்த முறை தாங்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கக்கூடிய ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிடலாம்.