ADDED : செப் 13, 2011 09:46 PM
சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில், 'இயல், இசை, நாடக, நாட்டிய விழா, சென்னையில் 11 நாட்கள் நடத்தப்படுகிறது.இவ்விழா குறித்து, இம்மன்றத்தின் தலைவர் தேவா, உறுப்பினர் செயலர் நடிகை சச்சு சென்னையில், நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில், 'இயல், இசை, நாடக, நாட்டிய விழா சென்னையில் உள்ள இசைக் கல்லூரி வளாகத்தில், வரும் அக்டோபர் 6ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரை, 11 நாட்கள் நடத்தப்பட உள்ளது.
முதல் நாள் துவக்க விழா, மாலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதில், கர்நாடக இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனின் (ஜுகல் பந்தி) இசை நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி நாதனின் சாக்சபோன் இசை நிகழ்ச்சியும், கோபிகா வர்மாவின் மோகினியாட்டமும், 8ம் தேதி நிவேதிதா பார்த்தசாரதியின் பரத நாட்டியமும், மகாநதி ÷ஷாபனாவின் வாய்ப்பாட்டு கச்சேரியும், 9ம் தேதி பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றமும், ஏ.எஸ்.மாணிக்கவாசகத்தின் பொம்மலாட்டமும், டி.எல்.மகாராஜனின் தமிழிசைக் கச்சேரியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து, 10ம் தேதி இசைக் கலைஞர் ஜெயந்தின் புல்லாங்குழல் கச்சேரியும், ராஜேஷ் வைத்தியாவின் வீணைக் கச்சேரியும், 11ம் தேதி, 'டிவி' வரதராஜனின் 'ரீல் எஸ்டேட்' சமூக நாடகமும், பார்வதி ரவி கண்டசாலாவின், 'பெண்மைச் சுடர்' நாட்டிய நாடகமும், 12ம் தேதி ஸ்ரீஹரியின்,'ருத்ரதாரி' இதிகாச நாடகமும், ரங்கராஜனின் வீணை இசை நிகழ்ச்சியும், 13ம் தேதி ஷேக் மெகபூப் சுபானி, காலிஷா பி மெகபூப் ஆகியோரின் நாதஸ்வர நிகழ்ச்சியும், மெலட்டூர் ஆர்.மகாலிங்கத்தின், 'ஆண்டாள் திருக்கல்யாணம்' பாகவத மேளா நாட்டிய நாடகமும் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி, வி.வி.எஸ்.மணியின் கொன்னக்கோல் இசை நிகழ்ச்சியும், எஸ்.சவுண்டப்பனின் இசை நாடகமும், 15ம் தேதி பத்மா சங்கரின் வயலின் இசைக் கச்சேரியும், ராதிகா சுரஜித்தின், 'திரை இசையில் தமிழும் பரதமும்' நாட்டிய நாடகமும், 16ம் தேதி நிறைவு விழாவில், சிவாஜிராவின், 'கரகம், காவடி, பொய்க்கால் குதிரை' ஆட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்வாறு தேவாவும், சச்சுவும் தெரிவித்தனர்.