ஜெ. வீட்டுக்கு எதிரில் புதிய பங்களா போயஸ் கார்டனில் குடியேறினார் சசிகலா
ஜெ. வீட்டுக்கு எதிரில் புதிய பங்களா போயஸ் கார்டனில் குடியேறினார் சசிகலா
ADDED : ஜன 25, 2024 01:10 AM

சென்னை,:சென்னை போயஸ் கார்டனில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரே, புதிதாக கட்டப்பட்ட பங்களாவில் சசிகலா நேற்று குடியேறினார்.
முதல்வராகவும், அ.தி.மு.க., பொதுச்செயலராகவும் இருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த இல்லத்தில் ஜெயலலிதாவுடன், அவரது தோழி சசிகலா வசித்து வந்தார்.
கடந்த 2016ல், ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும், வேதா இல்லத்திலேயே சசிகலா இருந்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின், காட்சிகள் மாறின.
சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட பழனிசாமி கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., சென்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேதா இல்ல பங்களா, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் வசமானது.
இந்நிலையில், போயஸ் கார்டன் பகுதியிலேயே வசிக்க விரும்பிய சசிகலா, தன் பெயருக்கு வேதா இல்லம் எதிரே ஏற்கனவே வாங்கி வைத்திருந்த காலி இடத்தில், தனக்கு தனி வீடு கட்டத் துவங்கினார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, போலீசாரின் வாகனங்கள் நிறுத்த, இந்த இடம் பயன்படுத்தப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், புதிய பஙகளாவின் கிரகப்பிரவேசம் நடந்தது.
சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
கிரகப்பிரவேசத்திற்கு முன்பாக, வேதா இல்லத்தின் வாயிலில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜைகள் செய்து, சசிகலா வழிபட்டார்; புதிய பங்களாவில் கோ பூஜையும் நடத்தினார்.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதா வீடு எதிரே புதிய பங்களாவில் இருந்து, அதற்கான பணிகளை மேற்கொள்வார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.